தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று அதிபலத்த கனமழையும், மேலும் சில மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (04.08.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் அறிவித்துள்ளார். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், தேனி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.