திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் ஊராட்சிக்குட்பட்ட மணலியில் அரசு தொடக்கப்பள்ளியில் 7 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ள சஞ்சய் காந்தி பள்ளியில் மதுபோதையில் இருப்பதாகவும், பள்ளிக்கு தினந்தோறும் மதுகுடித்து விட்டு வருவதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளியிலே மது அருந்துவதாக தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் கல்வித்துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியரின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் தலைமை ஆசிரியர் மது அருந்துவது உறுதியானதை தொடர்ந்து, அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்