சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ‘சவோ’ என்னும் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகர பஸ்களின் வருகையை தெரிந்து கொள்வதற்கான செயலியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சென்னை நகரில் பஸ்களுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் ‘சவோ’ செயலியை பயன்படுத்தி தாங்கள் செல்ல விரும்பும் பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதேபோல் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். சென்னை மாநகரில் இயங்கும் 3233 பஸ்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து தினமும் 950 பஸ்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இந்த ‘சவோ’ செயலியை அரசு விரைவு பஸ்களுக்கும் விரிவுபடுத்தும் நிலையில் இனி அவர்களும் இந்த செயலியால் பயன் அடையலாம்.
இதன் மூலம் பயணிகள் பஸ்களின் நேரங்களை தெரிந்து கொண்டு வசதியாக பயணிக்க முடியும். இந்த செயலியில் பயணிகள் நுழைந்து, ‘சர்ச் பஸ் ரூட்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பஸ் தடம் எண்ணை டைப் செய்தால் தற்போது இயக்கப்படும் அனைத்து பஸ்களும் அதில் காட்டப்படும். அதன்பிறகு தாங்கள் செல்ல விரும்பும் பஸ்கள் பற்றிய தகவல்களை பெறலாம். இந்த நடைமுறை சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் முதலில் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே ‘சவோ’ செயலி சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் இது விரைவில் நடைமுறைக்கு வரும் இதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் தரவை நாங்கள் செயலியில் பதிவேற்ற தொடங்கியுள்ளோம். தமிழகத்துக்குள்ளும், தமிழகத்துக்கு வெளியேயும் இயங்கும் அனைத்து அரசு விரைவு பஸ்களையும் இதன் மூலம் கண்காணிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.