‘கழுகு’ பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு முதலில் ’காமன் மேன்’ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே பெயரில் வேறு ஒரு நிறுவனம் தங்களின் திரைப்படத்தை முன்கூட்டியே பதிந்துவிட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், ‘நான் மிருகமாய் மாற’ என்ற புதிய பெயரை இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹரிப்ரியா, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வழக்கமான சசிகுமார் படமாக இல்லாமல் புதிய கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.