ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க., திண்டாடிக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து மற்ற கட்சி சார்ந்த தலைவர்களே ’அது அதிமுக உட்கட்சிப் பூசல், நாம் அதில் தலையிடக்கூடாது’ என்று இருக்கும் நிலையில், சசிகலா ’புரட்சி பயணம்’ என்ற பெயரில் மீண்டும் பூச்சாண்டி காட்டத் தொடங்கியுள்ளார். திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு ’நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்’ என்று காரில் ஏறி ஜெயிலுக்கு போவதுபோல, அவ்வப்போது சசிகலா கொதித்தெழுந்து ’நானும் தீவிர அரசியலில் இருக்கிறேன், நானும் அரசியல்வாதிதான்’ என்று காரில் ஏறிக்கொண்டு புதுப்புது பெயர்களில் உலா வந்துக்கொண்டு இருக்கிறார். முன்னதாக, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று பெங்களூருவிலிருந்து காரில் களேபரம் செய்துகொண்டு சென்னை வந்தபோதே அ.தி.மு.க., நிர்வாகிகள் யாரும் அவரை கண்டுக்கொள்ளவில்லை. அடுத்து ’அ.தி.மு.க.,வை மீட்பேன்’ என்ற பெயரில் தொலைப்பேசியில் பேசியும் பயன் இல்லை. இதைத்தொடர்ந்து, ஆன்மீக பயணம் என்ற பெயரில் கோவில்களிலும், தென் மாவட்டங்களை சுற்றியும் பிரயோஜனமில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் புரட்சி பயணம் என்ற பெயரில் மீண்டும் ஊர்சுற்ற புதுப்பெயர் வைத்து புறப்பட்ட சசிகலா வீட்டின் முன் மீடியாகாரர்களை விட தொண்டர்கள் குறைந்த அளவிலே இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவை அ.ம.மு.க., தொண்டர்கள் சந்திப்பதை தவிர்க்க கட்சி நிர்வாகி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பின்னர், சசிகலாவை காண தொண்டர்கள் கூட்டம் கூடி இருப்பதாகக்காட்ட பேருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகளையும், எங்கு நின்றால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி தலைவரை காண தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது போன்ற பிம்பம் உண்டாகுமோ அங்கெல்லாம் காரை நிறுத்தி தொண்டர்கள் காத்திருப்பது போன்ற பம்மாத்து வேலை செய்திருக்கிறார் சசிகலாவும் அவரது மிச்சசொச்ச ஆதரவாளர்களும். மேலும், கட்சிக்கூட்டங்களுக்கு வருபவர்களை அழைத்து வந்தால், ரூ.1000 கொடுக்கவேண்டும் என்பதற்காக, ரூ.300 கூலி வாங்கும் கூட்டத்தை வரவேற்று அழைத்து வந்துள்ளனர். ஆனால், அவர்களோ, கோஷம் மட்டும் போடாமல் சசிகலாவின் வரவேற்பு வேலையில் இருந்த கட்சி நிர்வாகிகளிடம் இருந்து சுமார், 1.75 லட்சம் வரை அபேஸ் செய்துள்ளனர். இதைவிட சிறப்பான சம்பவம் என்னவென்றால், திருத்தணி முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள், சசிகலாவை தரிசிக்க வந்ததாக பாவலா செய்ததுதான் என்று சசிகலா ஆதரவாளர்களே கட்சி நிர்வாகிகளை புகழ்ந்து பேசிவருகின்றனர் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.