கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவுக்கு சிறப்பு சலுகையாக படுக்கை, பாத்திரங்களுடன் தனி சமையலுக்கான சமையலறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுப்பதற்கு ரூ.2 கோடி லஞ்சமாக அப்போதைய சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவுக்கு கொடுக்கப்பட்டதாக ஆதாரங்களும் அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா கர்நாடக அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த சத்யநாராயணராவ், ரூபா மீது ரூ.20 கோடி மானநஷ்ட வழக்கைத் தொடுத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் சக அதிகாரிகள் மீது அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வது மானநஷ்டமாகாது. ஆகவே சத்யநாராயணராவ், ரூபாவுக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.