சென்னை: தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (SPCA), விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு (NGOs) மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி – India Project for Animal Fund Nature, சென்னை – Animal Care Trust, சென்னை – Madras Animal Rescue Society, சென்னை – Prithvi Animal Welfare Society மற்றும் சென்னை – பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.” என்று தெரிவிட்க்கப்பட்டுள்ளது.