சென்னை: சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் ரோப் கார் வசதி செய்யப்பட உள்ளது. சென்னை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு புதிய போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி நகர்ப்புறங்களில் ரோப் கார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என 2022-2023-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப்கார் திட்டத்திற்கு வடிவமைப்பு கொடுக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியும் இதனை உறுதி செய்திருக்கிறது. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இரண்டு இடங்களில் இந்த திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை 4.6 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு வழித்தடத்திலும் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள நம்ம சென்னை செல்பி பாயிண்ட் வரையிலும் என இரண்டு வழி தடத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் டெண்டரை வெளியிட்டு உள்ளது. தேர்வு சுற்றுலா வசதிகள் மேம்படுத்தும் வகையிலும் அடுத்து 30 ஆண்டுகளில் அதிகரிக்க உள்ள மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து பெசன்ட் நகருக்கு 15 நிமிடத்தில் சென்று விட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரோப் கார் வசதி சென்னைக்கு வந்துவிட்டால் மெரினா கடற்கரை பொது மக்களை மேலும் சுண்டியிழுக்கும் சுற்றுலா தலமாக மாறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த பணிகள் ஒரு புறம் நடைபெற உள்ள நிலையில் மெரினா கடற்கரையை மேலும் அழகுபடுத்தி அதன் முகத்தை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் , நடைபாதைகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மெரினாவை போன்று எலியட்ஸ் கடற்கரையையும் அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.