உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ களம் இறங்கியதால் அவர் மீது பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்தப்போட்டியில் ரொனால்டோ 30-வது நிமிடத்தில் கோல் போட்டார். அவர் எதிரணி வீரரை பவுல் செய்து விட்டு கோல் அடித்ததால் அது கோல் இல்லை என்று மறுக்கப்பட்டது. முதற்பகுதி ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் பிற்பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. 65-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார். அவருக்கு இது 5-வது உலக கோப்பை தொடராகும். இதையும் சேர்த்து அவர் ஆடிய எல்லா உலக கோப்பை தொடரிலும் குறைந்தது ஒரு கோல் போட்டுள்ளார். இதன் மூலம் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 37 வயதான ரொனால்டோ படைத்தார். உலக கோப்பையில் ஒட்டுமொத்தத்தில் அவர் அடித்த 8-வது கோல் இதுவாகும்.