சென்னை, வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனம் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்பட பல்வேறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கி வருகிறது. இதையடுத்து, தினமும் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பணம் அலுவலகத்தில் வைப்பது வழக்கம். இதனை அறிந்துக்கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 8 பேர், முகமூடி அணிந்து அந்த நிதி நிறுவனத்தில் இருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக வடபழனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் மேலும் 7 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.