இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை சார்ந்து பணவீக்கமும் உயர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. நுகர்வோர் விலை குறியீடானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. அதாவது பணவீக்கம் 6 சதவிகிதத்துக்குள் இருந்தால் மட்டுமே மக்களால் அனைத்து விதமான பொருட்களையும் சரியான விலையில் வாங்கி பயன்படுத்த முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மதிப்பிட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 7.41ஆக உள்ளது. மேலும், இந்தியாவில் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதே இந்த பணவீக்கம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தை மத்திய அரசுக்கு ஆர்பிஐ விரைவில் அறிக்கையாக தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.