மும்பை: 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்த தொடருக்கு தயாராகும் வகையில் சுமார் 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியலை பிசிசிஐ தயார் செய்துள்ளது.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ரிவ்யூ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என தெரிகிறது. அது தவிர வீரர்களின் உடற்திறனை உறுதி செய்யும் வகையில் மீண்டும் யோ-யோ சோதனை மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தேரும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிகிறது.
இதன் மூலம் ஐபிஎல் சீசனின் போது வீரர்களின் உடற்திறன், மன அழுத்தம் மற்றும் பணிச்சுமை போன்றவை கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல திட்டங்கள் இருக்குமாம். ஆனால், இது குறித்து பிசிசிஐ தரப்பில் இதுவரை ஃபிரான்சைஸ்களுக்கு முறையான தகவல் எதுவும் சொல்லப்படவில்லை எனத் தெரிகிறது. பேட்ஸ்மேன்களை காட்டிலும் பவுலர்கள் மீது இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கும் எனத் தெரிகிறது. 2021-22 சீசனில் மட்டுமே 70 வீரர்கள் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகியுள்ளனர். அதில் 23 பேர் சீனியர் ஆடவர் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.