அஇஅதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இதற்கான அழைப்பாணை அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தலைமைக் கழகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி,
1) கழக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்
2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவி அம்மா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்
3) கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்
4) கழக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்
5) கழக இடைக்கால பொதுச்செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்
6) கழக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது
7) கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்
8) புரட்சித் தலைவர் வழியில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் செயல்பட்ட அம்மா அரசின் வரலாற்று வெற்றிகளும்
9) அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்
10) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்
11) சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
12) மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்
13) இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்
14) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்
15) நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்
16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம் என்ற 16 தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளது.