சென்னை: சட்டப் பேரவையில், கேள்வி நேரம் முடிந்த பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், ”தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கி இருப்பதாகவும், இருவர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பிரிவை ஏற்படுத்தி, மற்ற நோயாளிகளிடமிருந்து தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசின் நிலைபாடு குறித்து பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.