புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:- வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு முடிவு செய்துள்ளது. 2023 – 24ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.4 சதவீதமாகவும், சில்லறை பணவீக்கம் நான்காவது காலாண்டில் 5.6 சதவீதமாக இருக்கும். 2022-23ம் ஆண்டுக்கான சிபிஐ பணவீக்கம் 6.5 சதவீமாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளதால், வீடு, வாகனக்கடன்களுக்கான தவணைத் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா -உக்ரைன் போர் மூண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிபுற காரணிகளால், அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2.5 புள்ளிகள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.