தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு தொடக்கப்படும். புதிய கல்வியாண்டில் புது வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு செல்வர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகள் வழக்கம்போல் ஜூன் மாதத்தில் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 44,000 பள்ளிகளில் மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். ஏற்கனவே, பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதற்கு முன்பாக பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கல்வி வாகனங்களை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிக்கு மாணவர்கள் வந்ததும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்றே தொடங்கி உள்ளது. கொரோனா இடைவெளி மற்றும் கோடை விடுமுறை காரணமாக இடைவெளிக்கு பிறகு வரும் குழந்தைகளுக்கு இன்று முதல் ஒருவார காலத்துக்கு மாணவர்களுக்கு புத்துணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கும் பணியும் இன்று தொடங்குகிறது. இந்தநிலையில், துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.