காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து பேசிய வார்த்தை ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரியும் காங்கிரஸ் கட்சியும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.,க்கள் நாடாளுமன்ற இருஅவைகளிலும் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு அவைகளும் முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘குடியரசுத் தலைவரை அவமதிக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அது தவறுதலாக நடந்துவிட்டது. குடியரசுத் தலைவர் இதுகுறித்து வருத்தப்பட்டால் நான் தனியாக அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பேன். அவர்கள் விரும்பினால் என்னை தூக்கிடலாம். தண்டனை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த விவகாரத்தில் சோனியா காந்தியை ஏன் இழுக்க வேண்டும்?’ என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக அவர், ‘நான் வாய் தவறி பேசியதால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. தவறுதலாக கூறிவிட்டேன். பாஜகவினர் தேவையற்ற சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்’ என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட அந்த கட்சியினர், இந்த விவகாரத்தில் சௌத்ரி ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டதாகக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.