தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷாம், குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த திரைப்படத்தின் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ’ரஞ்சிதமே’ பாடலின் புரோமோ வீடியோ நேற்று முன்தினம் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைதளத்தில் மாலை 6.30 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ’ரஞ்சிதமே’ என்ற இந்த முழுபாடல் விஜயின் குரலில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் தமன் இசையில் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. மேலும், இசையமைப்பாளர் தமன் இன்றுதான் தமக்கு தீபாவளி என்று ட்விட்டரில் பதிவிட்டதுடன் வாரிசு படத்தில் ராஷ்மிகாவுடன் விஜய் இருக்கும் முதல் அதிகாரபூர்வ புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.