இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சம் பெற்ற நிலையில் இலங்கையில் இருந்து சில தினங்களுக்கு முன் அதிபா் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவில் தஞ்சமடைந்தார். எனினும் அங்கும் அவருக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றதால் மாலத்தீவில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்றார். இதையடுத்து தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். கோத்தபய ராஜபட்சவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கிடையே, சிங்கப்பூருக்கு தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் தலைமை நீதிபதி முன்பாக அவர் பதவியேற்றார். மேலும், இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்ய தேர்தல் வரும் 20ஆம் தேதி நடக்கவுள்ளது. ஆனால், இலங்கையின் அதிபராக ரணில் பதவியேற்றதற்கு அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.