இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அதிபா் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச கடந்த வாரம் ராஜினாமா செய்தாா். இதையடுத்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டல்லஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 20ஆம் தேதி) நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் 223 வாக்குகள் பதிவாகின. இதில், 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளும், டல்லஸ் அழகம்பெரும 82 வாக்குகளும், அனுர குமார 3 வாக்குகளும் பெற்றனர். அந்த நாட்டில் ஒருவரை அதிபராக தோ்வு செய்ய பெரும்பான்மை எண்ணிக்கையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. இதன் மூலம், 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.