கடந்த 5-ந்தேதி ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச்சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த15 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டு, பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த 15 மீனவர்களும் கடந்த 7-ந் தேதி மன்னாரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த15 மீனவர்கள் இன்று மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, 10 ஆண்டுகள் இலங்கை எல்லைக்குள் மீனவர்கள் வரக்கூடாது என நிபந்தனை விதித்து விடுவித்து உத்தரவிட்டார். நிபந்தனையை மீறினால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். விடுதலையானவர்கள் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.