சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் இன்று (ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரக்ஷாபந்தன் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராக்கி கட்டுதலுக்கு, கயிரு தயாரிக்கும் பணியில் வடமாநில மக்கள் பலர் ஈடுபட்டு வந்தனர். வெளிநாடுகளில் உள்ள சகோதரர்களுக்கு பெண்கள் தங்களின் வாழ்த்துக்களையும் ராக்கி கயிரையும் பார்சலில் அனுப்பி வந்தனர். ரக்ஷாபந்தன் தினத்தில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் சகோதரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக ராக்கி என்னும் கயிரை கைகளில் கட்டுவார்கள். அவர்களின் அன்புக்கு மதிப்பளிக்கும் வகையில் சகோதரர்கள் பெண்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் மிகவும் முக்கியமானது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ”பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சகோதர, சகோதரிகளுக்கிடையே கொண்டாடப்படும் இந்த ரக்ஷா பந்தன் திருநாள், நமது சமூகத்தில், நல்லிணக்கத்தையும், மகளிர் மீதான மரியாதையையும் ஊக்குவிப்பதாக அமையட்டும்”என்றும், ”பிரதமர் மோடி, ரக்ஷா பந்தன் சிறப்பு நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றும் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ரக்ஷாபந்தன் தினத்தன்று அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசமாக பயணம் செய்ய சலுகை அளிப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானா மாநிலத்தில் பெண்கள், அரசுப் பேருந்துகளில் 36 மணி நேரம் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மறுநாள் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பெண்கள் இலவசமாக பேருந்துப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரக்ஷாபந்தன் பரிசாக இது வழங்கப்படுவதாக அந்தந்த மாநில அரசு கூறியுள்ளது.