ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் முகமது நபி குறித்து அவமதிக்கும் விதமான கருத்தை பேசியவருக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி வழக்கு…
உத்தரப்பிரேதச மாநிலம் புகழ்ப்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் 5 பெண்கள் வாரணாசியில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான வழக்குகள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஜூலை 4ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
முகமது நபி குறித்து அவமரியாதையாக பேசியது யார்?
பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஞானவாபி வழக்கு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடந்த மாதம் கலந்துகொண்டார். அதில், நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் வகையிலான கருத்துகளை பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கருத்துக்கு டெல்லி பாஜக கட்சியின் ஊடக பொறுப்பாளர் நவீன் ஜிந்தால் ஆதரவளித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த இரு பாஜக கட்சியினர் கருத்துக்கும் எதிர்ப்புகள் வலுத்தது. இதைத்தொடர்ந்து, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிந்தாவை பாஜக, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
அரபு நாடுகளின் கண்டனத்துக்கு உண்டான பாஜக அரசு…
பாஜக கட்சி சார்ந்தவர்களின் இந்த சர்ச்சைக்குறிய கருத்தால் அரபு நாடுகள் கொதித்தெழுந்தன. சர்ச்சைக்குறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் மற்றும் அவர்களுக்கு தக்க தண்டனையும் வைக்க வேண்டும் என ஒன்றன்பின் ஒன்றாக கத்தார், குவைத் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்தன. இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாகிஸ்தான் கருத்தால் கொதித்தெழுந்த இந்தியா…
நுபுர் ஷர்மா கருத்து தொடர்பாக பாஜக அரசின் செயல்பாடு குறித்து, பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்ததுடன் உலக நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்ததால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதற்கு பதிலளித்திருந்தது. அதில், ”பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எதிர்க்கொண்டு வரும் துயரங்கள் குறித்து உலக நாடுகள் நன்கு அறிந்தவை. இந்தியா மீது பாகிஸ்தான் களங்கத்தை விளைவித்து இந்தியாவில் வகுப்புவாத நல்லிணக்கத்தை தூண்டுவதற்கு பதிலாக தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீது அக்கறை செல்லுத்துமாறு கூறி இருந்தது.
ராஜஸ்தான் கலவரத்துக்கு காரணம் என்ன?
ஞானவாபி மசூதி வழக்கு ஜூலை 4ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் உள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்துகொண்டு இருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது வெளியில் வைத்து அவரது தலையை துண்டித்துள்ளனர். அந்த சம்பவத்தை ஈடுபட்டவர்களில் ஒருவர், கன்னையா லால் கொலை செய்யப்பட்ட கொடூர செயலை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கும் இவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த கொலை பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை வழக்குப்பதிவு…
கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக பேசும் போது முகமது நபி குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக தையல் கடைக்காரர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததால் கன்னையா லால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்வம் உதய்பூர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அங்கு பதற்றம் நிலவியதால், அசம்பாவிதங்களை தடுக்க உதய்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரம் இணையதள சேவை முடக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலையாளி மீது கைது நடவடிக்கை…
கன்னையா லாலை படுகொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கொலையாளிகள் ரியாஸ் அகமது மற்றும் கவுஸ் முகமது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொலை குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், உதய்பூரில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு சோகமான சம்பவம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த கன்னையாவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அந்த மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ., விசாரணை
இந்த கொலை சம்பவம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இந்த கொலையில் ஈடுப்பட்டவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு இருக்கலாம் என்றும், இந்த சம்பவத்துக்கு பின்னால் வெளிநாடுகளின் தூண்டுதல் இருக்கலாம் என்ற கோணத்தில், இதுகுறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.