தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேபோல், தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர் மழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு எந்த நேரத்திலும் உயர்த்தப்படலாம் என்பதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தூத்துக்குடி மாவட்டத்தில் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்துடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிக்கு காவிரி ஆற்றிலிருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்துகொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.