காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரையிலான பாதயாத்திரை (பாரத் ஜோடோ யாத்) இன்று மாலை தொடங்கவுள்ளார். முன்னதாக, நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் இன்று காலை ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் கன்னியாகுமரிக்கு சென்று அங்கு இருந்து யாத்திரையை தொடங்கவுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ராகுலின் பாதயாத்திரையை தொடங்கி வைக்கவுள்ளார். தமிழகத்தில் மட்டும் மொத்தம் நான்கு நாள்கள் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது. மேலும் மொத்தம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாள்கள் மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு கடந்து காஷ்மீரை அவர் அடையவுள்ளார்.