குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துடன், அவரது குழந்தை, பெற்றோர் உள்பட 7 உறவினா்களைக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை அந்த மாநில அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுகந்திர தினத்தையொட்டி விடுதலை செய்தது. இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற குஜராத் மாநில அரசை விளக்கம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்ற தகவலை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையில், பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார்கள். பிரதமரின் வாக்குறுதிக்கும் நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது. பிரதமர் பெண்களை ஏமாற்றியுள்ளார்.’ எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.