நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கடந்த 13,14,15, 20 மற்றும் 21 ஆகிய ஐந்து நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். ராகுல் காந்தியிடம் ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாகவே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சுமார் 50 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்றும் அவர் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. நேற்று காலை தொடங்கிய விசாரணை முடிய நள்ளிரவு ஆனதாக கூறப்படுகிறது. முன்னதாக, ராகுல் மீதான விசாரணையைத் தொடங்கிய நாள் முதலே அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் இன்று டெல்லி வர உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாளை சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளதால் பெரும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஈடுபடலாம் என்பதால் டெல்லி காவல்துறையினர் முன்னேற்பாடுகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.