நேஷனல் ஹெரால்டு வழக்கில், ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராகுல் காந்தியிடம் ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாகவே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ராகுல் காந்தி பதிலளிக்கும் பட்சத்தில் அவர் மீதான விசாரணை முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு நான்காவது நாளாக இன்று மீண்டும் அவர் மீதான விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையில் இன்று ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக்கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் சோனியாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டி உள்ளதால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் கேட்டிருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில், ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று, இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், ஜூன் 20ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான மூன்று நாட்களுமே அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் உள்ள பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. இதனையொட்டி, வரும் 20ஆம் தேதி காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்யப்போகின்றனர் என்று அரசியல் வட்டாரங்கள் யோசிக்கத்தொடங்கியுள்ளன. தவிர, சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.