ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசத்தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவரின் பின் பகுதியிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்ட ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரரை சம்ப இடத்திலேயே காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனிள்ளாமல் உயிரிழந்துள்ளார். நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான அபே கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நேற்று அபே சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக நினைவிடத்தில் ஜப்பான் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக அபேயின் இறப்புக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் உலக அளவில் உள்ள தலைவர்களும் இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.