சென்னை: செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சுயகட்டுப்பாட்டுடன் மக்கள் பின்பற்ற வேண்டும். விழாக்கள் மகிழ்ச்சிக்காக தான் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் பிஎப்.7 உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவும் தன்மை உடையது என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பதாலும் பொதுமக்கள் விதிகளை சுயகட்டுப்பாட்டுடன் முறையாக பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதில் 2.60 லட்சம் டோஸ் கோவாக்சின், 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 60 வயது கடந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன் களப் பணியாளர்களை கண்டறிந்து பூஸ்டர் டோஸ் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மூக்கு வழியாக செலுத்தும் மருந்துக்கு 800 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடப்படும்.” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.