மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெருக்கடி மற்றும் விமானங்களை கையாளும் திறன் குறித்த பிரச்சினை இருப்பதால், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்தும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பரந்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர்கள், நிலத்துக்கு உரிய சந்தைவிலை, வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தனர்.
145 நாட்களாக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி ஏகனாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நேற்று (டிசம்பர்.19) பேரணி நடத்தினர்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று 13 கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.