அகர்தலா: திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு : பல தசாப்தங்களாக, சந்தர்ப்பவாத அரசியலை கடைபிடிக்கும் கட்சிகளால் ஆளப்பட்டு வந்ததால் திரிபுரா மாநிலம் அதன் முக்கியத்துவத்தை, வளர்ச்சியை இழந்து இருந்தது. இதனால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதிகார அரசியலால் நமது பழங்குடி சமூகம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியின்மை வருத்தம் அளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், தேர்தல் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது மட்டுமே பேசப்பட்டு வந்தன. பாஜக இந்த அரசியலை மாற்றியுள்ளது, பழங்குடியினருக்கு பெருமை என்றால் என்ன என்பதைப் பாஜக அரசுதான் புரிந்து கொண்டது. அதனால்தான் அது பழங்குடியின சமூகத்தை முதல் தேர்வாக மாற்றியுள்ளது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்குவதில் திரிபுரா முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக தூய்மைப் பிரச்சாரத்தை திரிபுரா மக்கள்தான் ஒரு பொது இயக்கமாக மாற்றியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.