புதுச்சேரி: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதைக் கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.
மின் விநியோகத்தை தனியார்மயமாக்க அதன் சொத்துகளை நிர்வகிக்க விரைவில் புது நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் கூறுகையில், “புதுச்சேரி மின்துறையின் சொத்துகளை நிர்வகிக்க புதிய நிறுவனம் தொடங்க அரசு முன்மொழிந்துள்ளது. பரிமாற்றம் செய்யப்படும் சொத்துகளில் மின் அமைப்புகள், ஆலைகள், இயந்திரங்கள், கேபிள்கள், கம்பிகள், துணை மின்நிலையங்கள், மின்மாற்றிகள், கோபுரங்கள், மீட்டர்கள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் (நிலம் உட்பட) மற்றும் நிறுவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மின்விநியோகம் மற்றும் சில்லரை விநியோகத்தை பிரிக்கிறோம். அத்துடன் 51 சதவீத பங்குகளை மாற்றி 49 சதவீத பங்குகளை அரசே தக்கவைத்துக்கொள்ள ஆலோசித்து வருகிறது. இதுபற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திலும் பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். ஏல பங்குகளை நூறு சதவீதம் தரும் நிலையில் இருந்து அரசு தரப்பு மாறியுள்ளது .