கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. அப்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, பள்ளி வாகனங்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறை வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். இதனிடையே, போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதால், பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். ஆனால், அரசு சார்பில் எந்த பள்ளிகளும் விடுமுறை அளிக்கக்கூடாது என கூறியிருந்தது. மேலும் விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல பள்ளிகள் வழக்கம்போல் இயங்கினாலும் ஒருசில தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், பள்ளி விடுமுறை எதற்காக என்ற காரணத்தை தெரிவிக்காமல் பள்ளி இன்று விடுமுறை என்று மட்டுமே தெரிவித்துள்ளனர்.