2019ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது, அவசாரகால ஊரடங்கு சட்டத்தை மீறி, கடந்த மே மாதம் லண்டனில் உள்ள பிரதமர் அலுவலக இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து விருந்து நிகழ்ச்சியை நடத்தினார். கொரோனா காலத்தில் ஊரங்கு சட்டத்தை மீறி பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடத்தியதற்காக அவரின் மீது கண்டனம் எழுந்து, அதற்கு பின்னர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பும் கோரினார். இதனைத்தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிபின் இறுதி சடங்கின்போது பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது போரிஸ் ஜான்சனை மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்தது. இந்த சம்பவம் குறித்து லண்டன் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த இரு சம்பவங்களால் அதிருப்தி அடைந்த பிரதமரின் சொந்த கட்சியினரே அவரை பதவி விலக வலியுறுத்தி நெருக்கடிக் கொடுத்தனர். இந்த நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 359 எம்.பி.க்களில் 211 பேர் ஜான்சனுக்கு ஆதரவாகவும், 148 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றிப்பெற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமாராக நீடிக்கிறார்.