உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில், 2 நாட்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகள் என 14 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியுள்ளார். அதில், உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா, உக்ரைன் – ரஷியா போரால் உலகளாவிய வினியோக சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா மாற விரும்புகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங்-கை சந்தித்து பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.