இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனால், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில், குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், புதிதாக தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வார். இதற்கிடையில், இந்தியா முழுவதும் உள்ள 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4120 சட்டமன்ற, மேலவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தேர்ந்தெடுப்பர். வேட்புமனு ஏற்கப்பட்டு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும். இந்த தேர்தலில், தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை மாதம் 21ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் இந்த மாதம் (ஜூன்) 15ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வேட்புமனு மீதான பரிசீலனை 30ம் தேதி நடக்க இருக்கிறது. ஜூலை 2ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி தேதி என இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.