புதுடெல்லி: 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
முதலில் எகிப்திய ஆயுதப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுத்துச் சென்றது. இந்த குழுவில் 144 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் எகிப்து ஆயுதப்படையின் முக்கியப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்தக் குழுவை கர்னல் முகமது முகமது அப்தல் ஃபதா எல் கராஸாவி வழிநடத்தினார்.
போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: முன்னதாக சரியாக காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி போர்வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.