இந்தோனேசியா, மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 பதிவாகியது. இதனால் நகரமே குலுங்கியது, பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியபடி ஓடி வந்தனர். இந்நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போதைய நிலவரப்படி 162 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.