தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவநிலை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வடதமிழக மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நேற்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை அதிக அளவில் பெய்யாததால் இன்றைய தினம் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், இன்று செயல்பட இருந்த சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரில் மின்கசிந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை, துப்புரவு பணியாளர்கள் கண்டுபிடித்து தகவல் தெரிவித்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.