எழுத்தாளர் கல்கி, மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றை மையமாக கொண்டு எழுதிய வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வனை’ இயக்குநர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கி கடந்த வாரம் திரையரங்கில் வெளியிட்டிருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை லைக்கா நிறுவனத்தினர் தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் தட்டு தொழில்நுட்ப கலைஞர்களுடன், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரகுமான், விக்ரம்பிரபு, அஷ்வின், மலையாள நடிகர் லால், பார்த்திபன் என நீண்டுகொண்டே போகும் நடிகர் பட்டாளமும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்ததாகவும் தமிழ்த் திரையுலகில் மிக வேகமாக (ஆறு நாட்களில்) ரூ.100 கோடி வசூலைப் பெற்ற படம் என மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.