44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான தொடக்க விழாவில் பங்கேற்று தொடங்கி வைக்க இன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. இதற்காக பிரதமர் தனிவிமானம் மூலம் டெல்லியில் இருந்து மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ் அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு தொடக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிற்கு மாலை 6 மணிக்கு வருகை தரவுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.