பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் மாநிலம், காந்திநகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மோடியின் தாய்க்கு இன்றுடன் 99 வயது முடிவுற்று 100 வயது தொடங்குகிறது.இதனையொட்டி நேற்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கச் சென்றிருந்த மோடி, இன்று வரை அங்கேயே தங்கி இருந்து தாயாருக்கு வாழ்த்து கூற அவரது இல்லத்துக்கு சென்றார். அங்கு, வீட்டின் பூஜை அறையில் தாயுடன் இணைந்து பூஜை செய்து முடித்த பின்பு, பிரதமர் மோடி தன்னுடைய தாய்க்கு பாதபூஜை செய்து, மலர்மாலை அணிவித்து காலில் விழுந்து ஆசிபெற்றார்.
தொடர்ந்து, மோடியும் அவரின் தாயாரும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பின்னர், தாயாருடன் தரையில் அமைந்துகொண்டு மோடி உரையாடினார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 100ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் மோடியின் தாயாரை கவுரவிக்கும் நோக்கில், காந்தி நகரில் ”ரெய்சன் பெட்ரோல் பங்க்” அமைந்துள்ள 80 மீட்டர் நீள சாலைக்கு ”பூஜ்ய ஹீராபென் மார்க்” என பெயரிட திட்டமிட்டுள்ளதாக காந்தி நகர் மேயர் ஹிதேஷ் மக்வானா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.