சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று (ஜூலை மாதம் 29ஆம் தேதி) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவர்களுக்கு பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.