சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சிவஞானம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்வதில் சம்பவம் தொடர்பாக 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது, நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலிருந்து ரத்தக்கரை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் இருந்து சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை நீதிபதி சிவஞானம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.