டெல்லி : ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி வழக்கறிஞர் ஷாதன் ஃபராசட் என்பவர், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அமர்வில் மனு தாக்கல் செய்தார். குளிர்கால விடுமுறைக்குப் பிறகு இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இணைத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு தம்பதியர் தங்கள் திருமணத்திற்கு சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனு தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், கேரள உயர் நீதிமன்றம் உள்ளிட்ட வேறு சில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.அந்த மனுக்களில், தன்பாலின திருமணம் என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை என்றும், இதற்கு சட்டம் தடையாக இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால் பலர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 25-ம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.