சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தீவிரப் புயலில் இருந்து புயலாக வலுவிழந்துள்ளது. புயலாக வலுவிழந்த நிலையிலேயே புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமேப் பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” பொது மக்கள் கவனத்திற்கு மேன்டூஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக கவனத்தோடு சாலையை கடக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.