தீபாவளி பண்டிகையொட்டிய விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று பொதுமக்கள் வழக்கம்போல தங்களின் அன்றாட பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல், இன்று அதிகாலை முதலே பெருவாரியான மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால், சென்னையின் எல்லை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 16 ஆயிரத்து 888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், பண்டிகை முடிந்து வருபவர்களுக்காக அக்டோபர் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3,062 சிறப்பு பேருந்துகளும் சென்னையை தவிர்த்து பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக மாநகர பேருந்துகளும் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.