இந்தியாவின் பிரபல திரைப்பட பின்னணி பாடகரான கே.கே. என்ற கிருஷ்ணகுமார் குன்னத் (53) நேற்று இரவு கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, பின்னர் தான் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்றபோது திடீரென உயிரிழந்தார். தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் முதன்முதலில் அறிமுகமாகி கல்லூரிச் சாலை, ஹலோ டாக்டர், ’ஸ்ட்ராபெர்ரி கண்ணே’, காதலிக்கும் ஆசையில்லை, உயிரின் உயிரே, நினைத்து நினைத்துப் பார்த்தேன், காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல காதல் பாடல்கள் மூலம் 90’ஸ் கிட்ஸ் மத்தியில் காதலை பரிமாற பாலமாக இருந்த குரலுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்பட பாடல்களுடன் 3,500க்கும் மேற்பட்ட ஜிங்கிஸ் என்று அழைக்கப்படும் விளம்பர பாடல்களை திரைத்துறையில் களம் இறங்குவதற்கு முன்பே பாடியுள்ளார். கே.கே.யின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர்களுக்கும் இசைத்துறைக்கும் பெருத்த இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் திரைத்துறையினர் ட்டுவிட்டரில் அஞ்சலி பதிவுகளையிட்டு வருகின்றனர். முன்னதாக, மாரடைப்பு காரணமாக கே.கே. உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று கொல்கத்தா காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது