நடிகர்கள் பார்த்திபன், பிரிகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை பல சினிமா பிரபலங்கள் உட்பட சினிமா ரசிகர்கள் பார்த்து கருத்து கூறிவரும் நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்த்தார். அப்போது, அவருடன் பார்த்திபனும் இருந்தார். படம் முழுவதும் பார்த்த முதலமைச்சர், பார்த்திபனின் கையை குலுக்கி பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னர், இதுதெடார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எதிலும் தனிப்பாணி –அதுதான் பார்த்திபன்! ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் டுவிட்டை ரீடுவிட் செய்து பார்த்திபன் தனது பாணியில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ”Non-linear-ல், நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. பாராட்டப்படும்போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன. இனி பார்… பார்க்க …. பாராட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.